சென்னை: கபெ ரணசிங்கம் படம் குறித்து மோசமாக விமர்சனம் செய்த ப்ளு சட்டை மாறனை அப்படத்தின் இயக்குரும் எழுத்தாளரும் வெளுத்து வாங்கியிருக்கின்றனர்.
அறிமுக இயக்குநரான பெ விருமாண்டி இயக்கியுள்ள படம் கபெ ரணசிங்கம். விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ், ரங்கராஜ் பாண்டே, வேல.ராமமூர்த்தி, முனிஸ்காந்த் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.
ஜீ ப்ளெக்ஸ் ஒடிடி தளத்தில் நேற்று முன்தினம் இப்படம் வெளியானது. கபெ ரணசிங்கம் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.
கலவையான விமர்சனம்
படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் மட்டுமே நிரம்பியுள்ளார் என்றும் விஜய் சேதுபதி ரசிகர்களுக்கு இந்தப் படம் பெரும் ஏமாற்றம் என்றும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றனர். அதே நேரத்தில் சமீப காலத்தில் வெளியான படங்களில் தரமான ஒரு படம் என்றும் குடும்பத்துடன் பார்க்க வேண்டிய படம் என்றும் பாஸிட்டிவான கருத்துக்களையும் ரசிகர்கள் முன் வைத்து வருகின்றனர்.
ப்ளூ சட்டை மாறன்
இந்நிலையில் பிரபல விமர்சகரான ப்ளு சட்டை மாறன் கொஞ்சம் ஓவர் டோஸாக படத்தை விமர்சித்துள்ளார். இதனால் கடுப்பான அப்படத்தின் இயக்குநர் பெ.விருமாண்டியும், டயலாக் ரைட்டர் ஷண்முகம் முத்துச்சாமி ஆகிய இருவரும் சேர்ந்து இரண்டு பக்க அறிக்கையை வெளியிட்டு ப்ளு சட்டை மாறனை கிழித்து தொங்க விட்டுள்ளனர்.
பெருமூளை மழுங்கி
ஆரம்பிக்கும் போதே, உலகின் ஆகச்சிறந்த அறிவாளி அண்ணன் நீல சட்டை மாறன் அவர்களுக்கு என வெளுத்துள்ளனர். மேலும் 'நாங்கள் எடுத்துக்கொண்ட கதை என்ன என்பதை புரிந்து கொள்ளும் பேராற்றல் படைத்த மகா விஞ்ஞானியான தங்களுக்கு நாங்கள் திரைக்கதையாகவும் காட்சியாகவும் என்ன சொல்லியிருக்கிறோம் என்பதை புரிந்துகொள்ள முடியாமல் தங்களின் பெருமூளை மழுங்கி மட்டையாகி போனது கண்டு மிகவும் வேதனையடைந்தோம்.
கணமான தலையில் ஏறவில்லை
ஒரு பெண் தன் கணவன் மீது எவ்வளவு பெருங்காதல் கொண்டிருப்பாள் என்பதை ஒருசில வார்த்தைகளால் உங்களைப்போல அதிமேதாவித்தனமாக பேசிப் புரியவைக்க முடியாமல், சில காதல் காட்சிகள் மூலம் பார்வையாளர்களுக்கு உணரவைக்க முயன்றதற்கு வருந்துகிறோம். காதல் காட்சிகளின் ஊடே கதாநாயகன் என்ன காரணத்திற்காக நீரோட்டம் பார்க்கும் வேலையை செய்யும் விதமாக காட்சியமைத்திருக்கிறோம் என்பதும் உங்கள் கணமான தலையில் ஏன் ஏறவில்லை என்று புரியவில்லை.
குறட்டை விட்டு தூங்கி
வெளிநாட்டு வேலைக்கு செல்வோரை வைத்து இங்கு ஏன் வேலை இல்லை? எதனால் வேலை இல்லை? யாரால் வேலை இல்லை? என்று பேசியிருக்கிறோம். அதை கவனிக்காமல், படம் பார்க்கும்போது குறட்டை விட்டு தூங்கி உள்ளீர்கள் என்பதை ரணசிங்கம் பட விமர்சனம் செய்யும் காணொளியில் தாங்கள் சோர்வாக இருப்பதன் மூலம் உணரமுடிகிறது.
மூளை தடுமாற்றம்
அரசு அலுவலர்கள் எல்லோரும் கதையின் நாயகிக்கு உதவி செய்கிறார்களாம்? என் கதைக்கு எதிராக நானே திரைக்கதை அமைத்துள்ளேனாம். வயது ஏற ஏற மூளை தடுமாற்றம் ஏற்பட்டு சுய சிந்தனை தப்பி உளறுவது இயற்கைதான். பாவம் அந்த நிலைக்கு நீங்கள் வந்துவிட்டது கண்டு எங்கள் கண்கள் குளமானது.
யாசம் செய்தீர்கள்
படத்தில், இங்கு இருக்கும் அத்தனை அரசு துறைகளும் சாமான்ய மனிதர்களின் கோரிக்கைகளை நிராகரிக்காது, மறுக்காது மாறாக ஏற்றுக்கொள்வது போல் நடிக்கும். ஏதாவது காரணம் சொல்லி நம்மை அலைகழிக்கும் என்று குணசேகரன் கதாபாத்திரம் சொல்லும். அதையும் கவனிக்காமல் உங்கள் காணொலி விளம்பரத்திற்காக யாரிடம் கையேந்தி யாசகம் செய்துகொண்டிந்தீர்களோ தெரியவில்லை.
வாதிக்க தயார்
நாடகத்தனமாக படம் எடுத்ததற்கு மன்னிக்கவும். உங்களிடம் பயிற்சி பெற்று எதிர்காலத்தில் நிச்சயம் உலக இயக்குநர்களின் வரிசையில் இடம்பிடிப்பேன் என்ற நம்பிக்கை உள்ளது. பொடுதலை கதைக்கு செலவிட்ட நேரத்தில் சற்று விமர்சனத்திற்காக எடுத்துக்கொண்ட திரைப்படத்திற்கும் செலவிட்டிருந்தால் ஒருவேளை இது சுமாரான விமர்சனமாக வந்திருக்க வாய்புண்டு. நேரம் இருந்தால், நெஞ்சில் உரமிருந்தால் நேரடியாக வாதிக்க தயார்.. இவ்வாறு அந்த அறிக்கையில் ப்ளு சட்டை மாறனை கிழித்து தொங்க விட்டுள்ளனர்.