குஜராத் போலீஸில் முதல் லெஸ்பியன் ஜோடி.. பெற்றோர் அழைத்தும் பிரியாத பெண் காவலர்கள்

அகமதாபாத்: குஜராத் காவல்துறையில் முதல் லெஸ்பியன் என இரு பெண் போலீஸார் தங்களை அறிவித்துக் கொண்டனர். அதிலும் நீதிமன்றத்திற்கு சென்று இவ்வாறு அறிவித்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் 24 வயதுடைய இரு பெண் போலீஸ்களுக்குள் காதல் ஏற்பட்டது. அனிதா, வனிதா ஆவர் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). ஒரு கட்டத்தில் இருவரும் ஒருவருக்கு ஒருவர் பிரிய மனமில்லாமல் ஒரே வீட்டில் வாழ்ந்து வந்தனர்.

இதுகுறித்து சக போலீஸாருக்கும் தெரியும். இவ்வளவு ஏன் இவர்களது குடும்பத்திற்கே தெரியும். இவ்வாறு தினமும் இருவரின் நட்பும் சுமுகமாக சென்று கொண்டிருந்தது.





உறுதி:

ஒரு நாள் திடீரென சிக்கல் வந்தது. ஆம் இரு போலீஸாரில் வனிதாவின் பெற்றோர் நேராக இவர்கள் வசிக்கும் இடத்திற்கு சென்றனர். அங்கு இதெல்லாம் தவறு. இந்த போலீஸ் வேலையே விட்டுவிட்டு எங்களுடன் வந்துவிடுமாறு கோரிக்கை விடுத்தனர். ஆனால் வனிதாவோ அனிதாவை விட்டு வரமுடியாது என்பதில் உறுதியாக இருந்தார்.


பெற்றோர்:

எனினும் விடாமல் வனிதாவை அவரது பெற்றோர் சமரசப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். இதனால் வெறுப்படைந்த இருவரும் மஹிசாகர் போலீஸ் கண்காணிப்பாளரிடம் சென்று நடந்தவற்றை கூறி தங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என கடிதம் மூலம் கேட்டுக் கொண்டனர். ஆனால் அதற்கு சரியான பதில் இல்லை.

காதல் ஜோடி:

இதனால் அனிதாவும் வனிதாவும் குஜராத் உயர்நீதிமன்றத்தை நாடினர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஏ ஜே தேசாய், இந்த விவகாரத்தில் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் தலையிட்டு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார். இதனிடையே மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் நீதிமன்றத்தில் கூறுகையில் அவர்களது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து எங்களுக்கு கவலையில்லை. அவர்கள் பணியின் போது எப்படி இருக்கிறார்கள் என்பதுதான் கவலை என்றார். இதனால் காதல் ஜோடி இருவரும் மகிழ்ச்சி அடைந்தனர்.


அறிவிப்பு:

இதுகுறித்து காதல் ஜோடியின் வழக்கறிஞர் ஜாகீர் ரதோடு கூறுகையில், இவர்கள் இருவரும் கோர்ட்டிற்கு செல்வார்கள் என்று வனிதாவின் பெற்றோர் கருதவே இல்லை. இருவரும் துணிச்சலானவர்கள். விரும்பும் வாழ்க்கையை வாழ போராடி வருகிறார்கள். இவர்கள் குஜராத் போலீஸில் முதல் லெஸ்பியன் ஜோடி என தங்களை அறிவித்துள்ளனர் என்றார்.


Source: Oneindia Tamil

Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post