சென்னை: நாட்டுக்கொரு சேதி சொல்ல நாகரீக கோமாளி வந்தேனுங்க என அன்பே சிவம் படத்தில் பாடும் கமல்ஹாசன், பல படங்களில் நாட்டுப் பற்றை வளர்க்கும் கருத்துக்களை கூறியுள்ளார்.
இந்தியன், ஹேராம், விஸ்வரூபம் என சுதந்திர போராட்டத்துடன் தொடர்புடைய பல படங்களில் நடித்துள்ளார்
மேலும், தனது படங்களில் மறைமுகமாக அரசியல் மற்றும் சமூக கருத்துக்களையும் பேசி நடித்துள்ளார்.
சேனாதிபதியை மறக்க முடியுமா
இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் 1996ம் ஆண்டு வெளியான படம் இந்தியன். சுதந்திரத்திற்கு முன்பு இருந்த இந்தியாவையும், சுதந்திரத்திற்கு பிறகு ஊழல் வியாதி நிரம்பி வழியும் இந்தியா குறித்தும் மிகச் சிறப்பாக கதை சொல்லி இருப்பார் இயக்குநர் ஷங்கர். நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் படையில் சேர்ந்து ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராடும் காட்சிகளிலும், பிள்ளையே ஊழல் செய்தாலும் கொலை செய்யும் காட்சியிலும் சுத்தமான சுதந்திர போராட்ட வீரராக நடித்து கலக்கி இருப்பார் கமல்.
மகாத்மா காந்தியை பற்றி
சுதந்திரத்திற்கு பின்னர் இந்தியா - பாகிஸ்தான் பிரிக்கப்பட்ட நிலையில், கொல்கத்தாவில் நடந்த மிகப்பெரிய கலவரத்தை மையமாக வைத்து, மகாத்மா காந்தியை கொல்லத் துடிக்கும் இளைஞனாக ஹேராம் படத்தில் கமல் நடித்து இருப்பார். பாலிவுட் நடிகர் ஷாருக்கான் சம்பளமே வாங்காமல் கமலுக்காக நடித்துக் கொடுத்த அந்த படத்தில், மகாத்மா காந்தியை பற்றி தவறாக பலர் புரிந்து கொண்டனர் என்பதை விளக்கவே பல எதிர்ப்புகளை மீறி அந்த காவியத்தை உருவாக்கி இருப்பார் கமல்.
மரண தண்டனை வேண்டாம்
ஹேராம் படத்திற்கு பிறகு மீண்டும் கமல் இயக்கத்தில் 2004ம் ஆண்டு வெளியான படம் விருமாண்டி. இந்த படத்தில் மரண தண்டனை வேண்டாம் என்பதை வலியுறுத்தி ஒரு சுதந்திர போராட்டத்தை அருமையான திரைக்கதை வாயிலாக நடத்தி இருப்பார் கமல்ஹாசன். இதுவும் ஒரு நாட்டுப் பற்று படம் தான்.
விஸ்வரூபம்
ஹாலிவுட் படங்களுக்கு நிகராக விஸ்வரூபம் படத்தை இயக்கி இருப்பார் கமல்ஹாசன். இந்திய ராணுவப் படை வீரராகவும், ரகசிய உளவாளியாகவும் நடித்து அசத்தி இருப்பார். ஒசாமா பின்லேடன், சர்வதேச தீவிரவாதம், தீவிரவாதிகளுக்கும் குடும்பம் இருக்கு என போர்கள் வேண்டாம் என பல்வேறு உலகப் பற்று கருத்துக்களையும் உள்ளடக்கி சொல்லி இருப்பார் கமல்ஹாசன்.
சுதந்திர போராட்ட வீரர்
இந்தியாவின் முதல் சுதந்திர போராட்ட வீரர் என சொல்லப்படும் மருதநாயகத்தின் கதையை படமாக எடுக்க வேண்டும் என்ற கமல்ஹாசனின் நீண்ட நாள் கனவு இது வரை நடைபெறவில்லை. பல முறை முயற்சி செய்தும், 25 சதவீதத்திற்கு மேல் ஷூட் செய்தும் இருந்த அந்த படத்தில் இனிமேல் தன்னால் நடிக்க முடியாது என்றும், வேறு ஒரு நடிகரை வைத்துத் தான் உருவாக்க வேண்டும் என்றும் கமல் அண்மையில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
எகிறும் எதிர்பார்ப்பு
ஏகப்பட்ட படங்களில் சுதந்திர போராட்ட கருத்துக்களை முன் வைத்து இருந்தாலும், இந்தியன் படம் என்றுமே அதில் தனி இடத்தை பிடிக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. 25 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இயக்குநர் ஷங்கருடன் இணைந்து இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். கமல். 90 வயது சேனாதிபதியாக எப்படி வந்து மிரட்டப் போகிறார் என்பதை பார்க்க ஒட்டுமொத்த இந்தியாவே காத்துக் கிடக்கிறது.
Source :Tamil.filmibeat (https://tamil.filmibeat.com)